×

தேசபக்தி பாதயாத்திரை மேற்கொள்ளும் மதுரை தம்பதி

தர்மபுரி, நவ.28: காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி, மதுரை தம்பதி தேசபக்தி பாதயாத்திரையாக நேற்று இரவு தர்மபுரி வந்தனர்.  மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த கருப்பையா(49). இவரது மனைவி சித்ரா(51). இவர்கள் ஜவுளி வியாபாரம் மற்றும் மளிகை கடை வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர்கள், கடந்த 1992ம் ஆண்டு முதல் மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், காந்தியடிகளின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூரில் காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள காந்தி வித்யாலயம் பள்ளியில், கடந்த 14ம் தேதி நேரு பிறந்த நாளில்  பாதயாத்திரையை தொடங்கினர். ஈரோடு, சேலம் வழியாக நேற்று இரவு தர்மபுரி வந்தனர். இவர்களை தர்மபுரி சர்வோதய சங்கத்தின் காதிகிராப்ட் துறை அதிகாரிகள் வரவேற்றனர். இன்று (28ம் தேதி) காலை கிருஷ்ணகிரி நோக்கி புறப்படுகின்றனர். ஒருநாளைக்கு 30 கிலோ மீட்டர் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

இது குறித்து கருப்பையா-சித்ரா தம்பதி கூறுகையில், ‘தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி, கடந்த 23 ஆண்டுகளாக நாடுமுழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறோம். இதுவரை 86 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ள நிலையில், ஒரு லட்சம் கிலோ மீட்டர் பயண தூரத்தை இலக்காகக் கொண்டிருக்கிறோம். தில்லையாடியில் இருந்து திருப்பூர் வரை முதல் கட்ட பயணத்தை நிறைவு செய்துள்ளோம். தற்போது 2ம் கட்ட பயணத்தை, திருப்பூரில் தொடங்கி பெங்களூரு வழியாக கர்நாடக மாநிலம் தும்கூர் ரவீந்திரா கலாநிகேதன் கல்லூரியில், வரும் 9ம் தேதி மூதறிஞர் ராஜாஜி பிறந்த தினத்தில் நிறைவு செய்கிறோம்,’ என்றனர்.

Tags : Madurai Couple ,
× RELATED மதுரை தம்பதி டேக்வாண்டோவில் கின்னஸ் சாதனை: ஒரு நிமிடம்... 154 கிக்